மூலவர் மேற்கு பார்த்த சன்னதி. கோயில் நுழைவாயிலுக்கு அருகில் வலதுபுறம் அம்மன் சன்னதி உள்ளது. இத்தலத்தில் அம்பிகை வடக்கு திசை நோக்கி அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது. அகத்தியர், வசிஷ்டர், பீமன், சூரியன் ஆகியோர் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுள்ளனர். சித்திரை மாதம் 6 முதல் 8ம் தேதி வரை சூரியனின் கதிர்கள் மூலவர் மீது விழுகின்றது.
சுந்தரர் தவநெறி பெற்ற தலம். இத்தலத்திற்கு வந்த சுந்தரரை சிவபெருமான் முதியவராக வந்து ஆட்கொண்டார். அந்த இடம் இவ்வூருக்கு அருகில் உள்ள 'கிழப்பாக்கம்' என்னும் ஊர். அங்கு ஒரு கோயிலும் உள்ளது. சந்தானக் குரவர்களுள் ஒருவரும், 'சிவஞானசித்தியார்' என்னும் சாத்திர நூலைப் பாடியவருமான அருணந்தி சிவாச்சாரியார் அவதரித்து வாழ்ந்த தலம். திருத்தளுர் கோயிலுக்கு எதிரே செல்லும் தெருவின் முடிவில் அவரது சமாதிக் கோயில் உள்ளது.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். அருணகிரிநாதரும் தமது திருப்புகழில் இத்தலத்தைப் பாடியுள்ளார். காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். தொடர்புக்கு : 9444807393,
04142-248498 |